Pages

Monday, 10 September 2012

என் கனவின் நிழல்

மெரூன் நிற சேலை அணிந்திருந்தார்.நேற்றைய கனவிலும் இதே சேலையைத் தான் அணிந்திருந்தாரா? ச்சே இதே சேலையாக இருக்க முடியாது.ஆனால் இதனை போன்றதொரு சேலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மெரூனா? சிகப்பா? என் பெரியம்மாவின் முகம் கார்டூனிஸ்ட்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. கார்டூனிஸ்ட்களுக்கு  அல்வா தான் வேண்டுமா? இட்லி மிளாகாய் பொடி சட்னி என அவரவர் பாடு.  பெரியம்மாவிற்கு கருணாநிதி மூக்கு. மன்மோகன்சிங்கின் நெற்றி. இது போதாதா? மூவரையுமே எனக்கு பிடிக்காது. இல்லையில்லை, நால்வரையுமே எனக்கு பிடிக்காது.பெரியம்மாவில் 'அம்மா' ஒளிந்திருப்பதை கவனிக்க. ஆனால் நேற்றைய கனவில் என்னிடம் இன்முகத்தோடு பேசினார். நான் கனவில் ஆச்சர்யப்பட்டது கனவுபோல் அல்லாது துல்லியமாக நினைவில் இருப்பது மற்றொரு பேராச்சர்யம். அதுவே என் பயமும்.

அடே கண்ணா! என்கிறார் பெரியம்மா.

அடேயில் அத்தனை குழைவு. என் கனவிலும் இப்படித் தான் அழைத்தார். நகை வாங்கவேண்டும் என்றார்.துணைக்கு வாடா என்றார். எப்போதும் மறுத்துவிடும் நான் ஏனோ சரியென்று தலையாட்டிக் கொண்டே அவருடன் செல்கிறேன். நகையெல்லாம் வாங்கித் திரும்பும் வழியில் மின்சார சீர்குலைவு .என் அலைபேசி வெளிச்சமே எனக்கும் நான் வெறுக்கும் பெரியம்மவிற்கும் உற்ற துணை என்ற நிலையில் நாங்கள் உட்புகுந்து வெளியேற வேண்டிய சிறு சந்தில் நம் சொந்த நிழல்களே எழுந்து பேயாடி அச்சுறுத்தும் இருட்டில் நிழல் உருவம் ஒன்று அசைந்தாடி வருவதை கண்ட போது என் உயிர் என் கூட்டில் இல்லை.

நிஜத்தில் எனக்கு வேர்த்திருக்கிறது என்று கனவிலும் எனக்கு புரிகிறது. ஆனால் நான் கனவு கண்டுகொண்டு தான் இருந்தேன். குழப்புகிறேனா? நானே இன்னும் தெளிவடையவில்லை. அந்த இருட்டு உருவம் எங்களை நோக்கி முன்னேறி என் பெரியம்மாவிடம் இருந்த நகைப் பைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டது.நான் அசட்டுத் தனமாக அலைபேசியின் வெளிச்சத்தை அவன் முகத்தில் பாய்ச்ச யத்தனிக்க என் பதிமூன்றாயிர ரூபாய் மதிப்புள்ள அலைபேசியையும் பிடுங்கிக் கொண்டது அப்பேயுருவம்.போச்சு! நான் கனவிலிருந்து விழித்துக் கொண்டேன்.

இப்போது பயமாக உள்ளது.இருக்காதா பின்னே! இதோ இப்போது கனவில் நடந்தது போலவே நகை வாங்கி வருவதற்குள் இருட்டி விட்டது. ஐயோ! இதோ மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது.கனவை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறேனா? அதே போலொரு இருட்டு.சந்து.இந்த இடத்தில் ஒன்றை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். நான் கொஞ்சம் புத்திசாலி. நகைக்க வேண்டாம்.பெரியம்மாவின் நகை போனால் போகட்டும்.என் அலைபேசி போகலாமா? இப்படியெல்லாம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என முன்பே யூகித்து தான் எனது அலைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.பெரியம்மா இப்போது அலறுகிறாள். 'யாரோ வரப்ல இருக்கே!'

யாரும் காணோமே

நல்லா பாருடா

ஆம். ஒரு இருட்டு உருவம் எங்களை நோக்கி முன்னேறியது. இதென்ன விசித்திரமாக இருக்கிறது? அது என்னை நோக்கித் தான் வருகிறது. கனவு கண் போன்றதா? தலைகீழாக உள்வாங்கப்பட்டு நேராவதா? 'சார்வாள், பை என் பெரியம்மாகிட்ட இருக்கிறது.என்னாண்ட இல்ல' என்று அறிவுறுத்தலாமா வேண்டாமா? அவ்வுருவம் என்னை நெருங்கி என் தோளில் கை வைத்தது. பின்பு சொன்னது

'தம்பி, நீ உன் செல்போன வீட்லய வச்சுட்டு வந்துடுவேன்னு நேத்தே எனக்கு தெரியும். உனக்கு மட்டுந்தான் உலகத்துல தூங்குற வழக்கம்னு நினைப்பா? எங்களுக்கும் கனவு வரும்!'