Pages

Saturday, 28 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்-விமர்சனம்

மஞ்சல் புடவை ,டாஸ்மாக் பாடல்கள் இல்லாமல் மிஷ்கின் எடுத்து இருக்கும் இரண்டாவது படம்.ஒரு கதையில் ஹீரோ வில்லன் என்பது எல்லாம் இல்லை.கதையின் பயனத்திற்கு எற்ப அது மாறுபட்டு கொண்டே இருக்கும். The Treasure of sierra madre மாதிரியான படங்களில் இதை காணலாம். இந்த படத்திலும் ஓநாயின் குணமும்,ஆட்டுக்குட்டியின் குணமும் ஸ்ரீ,மிஷ்கின் இருவருக்கும் மாறி மாறி வருகிறது.

மிஷ்கின் ஆட்டுக்குட்டி ஆனதற்கான JUSTIFICATION இறுதி 10 நிமிடங்கலில் ஒரு கதை வடிவில் மிஷ்கின் சொல்கிறார்.அதை சொல்லாமல் இருந்து இருக்கலாம். ஸ்ரீ ஓநாய் ஆகும்பொதெல்லாம் ஒரு JUSTIFICATION தேடி கொள்கிறார்.எல்லோருமே ஒநாய் ஆகும் ஸ்ரீயை கன்வின்ஸ் செய்யும் காட்சி சிறந்த எடுத்துகாட்டு.

அஞ்சாதே,யுத்தம் செய்,ஓஆ என தொடர்ந்து போலீஸ் பக்கங்களை இந்திய சினிமாவில் இவ்வளவு நெருக்கமாய் யாரும் காட்டியதில்லை.

கமல் படங்களில் இயக்குனருக்கும்,மிஷ்கின் படங்களில் ஒளிப்பதிவாளருக்கும் பெரிதாய் வேலை இருப்பதில்லை.படம் முழுக்க இரவு நேர சோடியம் வேப்பர் கண்கள்.

மிஷ்கினுக்கு ஸ்ரீ ஆப்பரேசன் செய்வதற்கு அவன் ஆசிரியர் உதவுவதற்கு அவரின் சூழ்நிலை காட்டப்படுகிறது.அதன் முடிவை இரு புல்லின் நடுவில் பின்னப்பட்ட சிலந்தி வலை உருவகிக்கிறது.இப்படி படம் நெடுக பல காட்சிகள்,

கண் இல்லாதவர் துப்பாக்கியை தடவி பார்ப்பது,ஸ்ரீ கொடுக்கும் கவுண்ட்ற்கு மிஷ்கின் கொடுக்கும் கவுண்ட்,அச்சிறுமி சுவரின் ஓரமாய் ஒதுங்கிக் கொள்ளுவது,’அய்யா” என்பதை பல மாடுலேஷன்களில் சொல்லும் போலீஸ்,மயங்கி இருக்கும் நபரை தாங்கி பிடிக்கும் காட்சி போன்றவை சில.
கதாபாத்திங்களின் தேர்வில் மிஷ்கின் அதிகம் மெனெக்கெடுகிறார்.சி பி சி ஐ டி ஆக பதிவர் ஷாஜி.போலீசாக (மவுனகுரு படத்தில் ஹீரோவிடம் முதல் காட்சியில் அடி வாங்கும் பொலீஸ்),விஷ்னுவர்தன் படங்களில் வரும் ஆதி.இறுதி சண்டையில் அட்டகாசமாய் சண்டையிடும் (உன்னை போல் ஒருவன் படத்தில் வெடி மருந்து விற்று கணேஷ் வெங்கட் ராமிடம் அடி வாங்குபவர்).படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் ஒரு போலீஸாக நடித்து இருக்கிறார்.


கதை என்ன என்பதை சொல்லாமல் இறுதி வரை உட்கார வைக்கும் திரைக்கதை.என் அருகில் படம் பார்த்த நபர் எல்லாம் பல முறை ஷ்ப்பா என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

படம் நெடுக மிஷ்கின் டெம்ப்லேட் ஃப்ரேம்கள்.ஏனோ பல இயக்குனர்களின் டெம்ப்லேட் கதைகளை நாம் குறை சொல்வதே இல்லை.

சமீப காலங்களில் ராஜாவை சரியாய் பயன்படுத்தியது பாலா,கமலுக்கு அடுத்து மிஷ்கின் தான்.

Threshold guardian,fairy tale,compassion,grim reaper,somebody loves all,Walking through life என பல ட்ரேக்ஸ் செம்ம ரகம். HANS ZIMMER மாதிரியான இசை. ராஜா இனியாவது எண்ணிக்கைக்கு வாசிக்காமல் இது மாதிரி மட்டும் .....

இறுதி டைட்டில் credits இல் மிஷ்கின் ஓவ்வொரு கதாபாத்திரத்தையும் மிருகத்தோடு ஒப்பிட்டு இருப்பார்,ஆரண்ய காண்டம் படத்தில் ஒவ்வொருவரின் பெயரும் மிருகத்தோடு இருக்கும். சம்யங்களில் இது போன்றவை க்ளிக்காமல் போவது உண்டு.தான் செய்த்தை விளக்க முயற்சித்து இருக்கிறார்.

மிஷ்கின் இறுதியில் இவ்வாறாக ஒரு கதை சொல்வார்.

ஒரு காட்டுல ஒரு கரடிக்கூட்டம் வாழ்ந்து வந்துச்சு.அதுகளுக்கு ஆட்டுக்குட்டி மட்டும் தான் வேணும்.அதுக ஆடுகள மட்டும் தான் வாழ விடும்.அங்க தெரியாத்தனமா சில ஓநாய்கள் மாட்டிக்கிச்சு.கூறுகெட்ட கரடிகளுக்கு ஆட்டுக்குட்டி ருசி மட்டும் தான் தெரியும்.இங்க வாழனும்னா ஆட்டுக்குட்டி தான் இடனும் என்ற விதி ஓநாய்களூக்கு புலப்படல.இதுக இட்ட ஆட்டுக்குட்டி இதுகள மென்மேலும் புண்படுத்துச்சு.ஓநாய்கள் சீழ் ஒழுகி இறந்து போனாலும் அதுகளுக்கு தெரிந்தது என்னவோ ஒநாய் குட்டிகள் தான்.






Monday, 18 February 2013

பீட்சா தின்ற கதை

எட்டாயிர ரூபாய் மாத வருமானத்தில் ஒரு பெரு நகரத்தில் மூன்று பேர் கொண்ட குடும்பம் வாழ்வதென்பது சபிக்கப்பட்ட நிதர்சனம். தலைவலித்தால் கூட ஒரு காப்பி குடிக்க யோசிக்க வேண்டும். வாரமொரு முறை என்றிருந்த சினிமா இப்பொழுது எப்போதோ ஏதோ ஒரு மாதத்தில் என்றாகிவிட்டது எனது பொருளாதார  வளர்ச்சி. சந்தையில் இன்ன இன்ன பொருட்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை டிவியில் விளம்பரங்கள் பார்த்து பெருமூச்செறிவதோடு சரி. ஆனால் என் பத்து வயது மகனுக்கு அதெல்லாம் புரியாதே. விளம்பரங்கள் பிரத்யேகமாக குழந்தைகளுக்காகவே தயாராகின்றன போலும். சாக்லேட்டிலிருந்து துணிகள் தங்க வைர விளம்பரங்கள் வரை அவை சிறுவர் சிறுமியரை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. நாம் உற்பத்தி செய்த ஒன்றின் மூலம் அவர்களின்
விற்பனையை பெருக்கும் உத்தியை கண்டுபிடித்தவனை மலைஉச்சியில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும். கீழே பாதாளம் தெரிகிறதா என கேட்க வேண்டும். 

அதென்னவோ என் மகனுக்கு சாக்லேட் கலர்பென்சில் துணி விளம்பரங்களில் ஆர்வம் ஏற்படவில்லை. Just Rs.99 என்று அறைகூவும் பீட்சா விளம்பரத்தை பார்த்தால் போதும். அமர்ந்திருப்பவன் இரண்டடி அந்தரத்தில் எகிறி குதிப்பான். "ப்பா இதாம்ப்பா நான் சொல்வேனில்ல இதாம்பா" என்பான். சமையலறையில் இட்லி வேகவைத்துக் கொண்டிருக்கும் அவன் அம்மாவை இழுத்துக் கொண்டு வருவான். அதற்குள் அடுத்த அறைகூவல் தொடங்கியிருக்கும். நீண்ட நாட்களாக பீட்சா  வாங்கித்தர சொல்லி அடம்பிடிக்கிறான். ஒரு வேளைக்கு ஒருவனுக்கு நூறு ரூபாய் என்பது என் சிறிய பட்ஜெட்டில் துண்டல்ல ஒரு பெரிய ஜமுக்காளமே விரிப்பது.

நாளை இவனுக்கு பிறந்தநாள். இந்த முறையாவது இவனது இந்த சின்ன ஆசையை நிறைவேற்ற வேண்டுமென விரும்பினேன்.அந்த வட்ட வடிவை முக்கோணங்களாக வெட்டி யுவ யுவதிகள் சுவைக்கிறார்கள். விளம்பரங்களில் பார்த்ததுதான். பின்பு வாழ்வே ஜென்ம சாபல்யம் அடைந்தது போல அவர்ளது முகங்களில் அத்தனை மகிழ்ச்சி. அப்படி குதூகலிக்க என்னதான் அதிலிருக்கிறது? ஒரே ஒரு பீட்சா வாங்கிக் கொள்ளலாம். நிச்சயமாக ஒரு முழு பீட்சாவை இவனால் உண்ண முடியாது. நூறு ரூபாய். பஸ்ஸில் போக வர முப்பது ரூபாயாவது வேண்டும். நூற்றைம்பது ரூபாய் கொண்டு போனால் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையே உற்சாகத்தை
கொடுத்தது. 

காலையில் சீக்கிரமே எழுந்து இருந்ததிலேயே புதிதாக தெரிந்த உடைகளை அயர்ன் செய்து குளித்துவிட்டு முந்தாநாள் போட்ட சட்டையையே மீண்டும் அணிந்து கொண்டேன். பயலும் உற்சாகமாக இருந்தான். மனைவி கூட வழக்கத்திற்கு மாறான மகிழ்ச்சியோடு இருப்பதாகப் பட்டது. அன்று சீக்கிரமே ஆபிஸ் கிளம்பிவிட்டேன். மாலையும் சீக்கிரம் வீடு திரும்பி உடை மாற்றி பயலை பீட்சா கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். "புது டிரஸ் ஸ்கூலுக்கு போட்டு போக வேண்டாம்.அப்பா சாயந்திரம் வந்து ஒன்ன வெளிய கூட்டிட்டு போறப்ப போட்டுக்கலாம் என்ன?" என்றேன். தலையாட்டினான். சமத்துப்பயல். இன்று நிச்சயமாக ஆகாசத்தில் பறக்கப் போகிறான். திட்டம் போட்டிருந்த நேரத்திற்கு முன்பாகவே  வீடு வந்து முகம் மட்டும் கழுவிக் கொள்ளலாம் என யோசித்து பின்பு அந்த எண்ணத்தை ஒத்திப்போட்டு குளித்து மனைவியிடம் ரகசியமாக கிசுகிசுத்து விட்டு கிளம்பினேன். பேருந்தில் மகனிடம் பீட்சா சாப்பிடப் போறோம் என்றபோது கண்களை அத்தனை பெரிதாக்கி ஆச்சரியப்பட்டதை பார்க்கும் போதே எனக்குப் பெருமையாக இருந்தது. 

"நிஜமாவாப்பா நிஜமாவா எனப் பத்து முறையாவது கேட்டிருப்பான்.
அன்றைக்கு வாழ்க்கையில்  முதல் முறையாக பீட்சா சாப்பிடுவது என முடிவு செய்து அதற்கென்றே பிரத்யேகமான கடைக்குள் நுழைந்து தயங்கி அமர்ந்தோம். சைவத்திலிருந்தே ஆரம்பிப்பதென ஆர்டர் எடுக்கவந்த பெண்மணியிடம் VEG PIZZA என்றேன். பதினைந்து நிமிடங்கள் கடந்தும் வாழ்வை உன்னதமாக்கும் பீட்சா வராததால் என்ன செய்வதென்றறியாமல் அந்தப் பெண்மணியை நான் அடிக்கடி திரும்பிப் பார்ப்பதை அவரும் கவனித்துக்கொண்டிருந்தார்.  எட்டாவது முறை பார்த்தபோது  'இன்னும்
அஞ்சு நிமிஷம் சார்' என்றார். நான் அசட்டுத் தனமாக சிரித்துவைத்தேன். பிசியாக இருப்பதாக காட்டிக் கொள்ள அலைபேசியை நோண்ட ஆரம்பித்தேன். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பீட்சா அந்த நிறுவனத்தின் பெயர் தாங்கிய அட்டைப்பெட்டியில் பேக் செய்யப்பட்டு என் முன் வைக்கப்பட்டது.அருகே சாஷேக்களில் சாஸும் நான் இன்னதென்று அறியாத இன்னபிற சமாச்சாரங்களும். 

உடனேயே உண்ணப்போகும் எனக்கெதுக்கு பேக் செய்து தருகிறார்கள் எனக் குழம்பிக்கொண்டே கொஞ்சநேரம் அதை எப்படி எங்கிருந்து பிரிப்பது என அறியாது தடுமாறி வெறித்துப் பார்த்து, பை பாஸ் சர்ஜரி செய்யும் போலி டாக்டர் போல தாறுமாறாக அட்டையை நான் கிழிக்க ஆரம்பிக்க, அந்தப் பெண் நிதானமாக என்னருகே நடந்து வந்து ஏதோ புதிய நகைக்கடை ஷோ ரூமை திறந்து  வைத்த மார்க்கெட் இழக்காத நடிகையை போல அட்டையை லாவகமாக நீக்கி பெருமிதம் பொங்க என்னைப் பார்த்தார். மகன் என்னை பரிதாபமாக பார்த்தான்.நான் பீட்சாவைப் பார்த்தேன்.நான்கு துண்டுகளில் ஒன்றை அவனுக்கு அளித்துவிட்டு நானும் ஒன்றை எடுத்து கடித்தேன். வழுவழுவென்று நான் கடித்த பகுதியுடன் நூல் போல ஒட்டிக் கொண்டு பெரிய துண்டும் நீட்டிக் கொண்டிருந்தது.கையின் உதவியுடன் அப்பகுதியை கத்தரிக்கலாம் என்றால் இந்தப் பெண் வேறு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

'ஏங்க நான் வெஜ் தான கேட்டேன்.சீஸ் பீட்சா கொடுத்திருக்கீங்க' என்றேன். அவர் அற்பப் பதரே என்பதுபோல பார்த்து, 'இங்க வெஜ்னாலே சீஸ் பீட்சாதாங்க ' என்றார். ஒரு வழியாக பற்களாலேயே அந்த அபாயத்தை கடந்து நிம்மதிப் பெருமூச்சிடுகையில், 'இந்த சாஸ் மேல ஊத்திக்கங்க.அப்பத்தான் நல்லா இருக்கும்' என்றார். 'ஆமாப்பா  நல்லா இல்ல' என்ற மகனை முறைத்துவிட்டு  சாஸ் ஊற்றிக்கொண்டேன். அதற்குள் அவர் மற்ற சாஷேக்களை சுட்டிக் காட்டி இதையும் பிரிங்க' என்றார். 'இல்லீங்க.அது பிடிக்காது(?)' என்றேன். 'அப்படியா?'. அந்த 'அப்படியா'வில் பலத்த சந்தேகமும் அவநம்பிக்கையும் தெறித்து என் மேல் விழுந்து என்னை சுட்டது. 

மகனின் தட்டைப்  பார்த்தேன்.பாதி கூட சாப்பிட்டிருக்க வில்லை.மீதமிருந்த இரண்டு பகுதிகளையும் முகத்தை அஷ்டகோணலாக்கி உண்டு முடித்தேன். கை கழுவலாமா என யோசித்து பின் நாப்கினால் என கையயையும் அவன் வாயையும் துடைத்துவிட்டேன்.

'இப்பதான் மொத தடவ பீட்சா சாப்பிடுறீங்களா?

'ஆமா'

பில் வந்தது.  பில்லைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதை உச்சரிக்கையில் ஏற்படும் துல்லியமான அதிர்ச்சி. வீட்டிலிருந்து இங்கு வருவதற்ரு இருவருக்கும் சேர்த்து பதினான்கு ரூபாய். பீட்சா நூற்றிபத்து ரூபாய் + வாட் வரி என ஏதோவொரு எழவு சமாசாரத்தை போட்டு அதற்கு தனியாக பதினேழு ரூபாய்.ஆக மொத்தம் ஒரு பீட்சா நூற்றி இருபத்தியேழு ரூபாய். ஒன்பது ரூபாய் மிச்சமிருந்தது. அந்தப் பெண் என்னையே பார்த்துக்கொண்டிருக்க ஐந்து ரூபாய் சில்லரையை எறிந்து விட்டு மகனை இழுத்துக்கொண்டு ஏமாற்றமடைந்த உஷ்ணத்தோடு கடையை விட்டு வெளியேறினேன்.நான்கு ரூபாய்க்கு எந்த பேருந்திலும் ஏற்றமாட்டான்.பத்து வயது ஆன ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு பத்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்  என்றெண்ணும் போதே துக்கம் பொங்கி கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு பேருந்து எங்களை கடந்தது. 

"அப்பா இந்த பஸ் நம்ம வீட்டுக்குப் போவுமா?" என்றான். 

"பேசாம வாடா  சனியனே" என்றேன்.

Monday, 10 September 2012

என் கனவின் நிழல்

மெரூன் நிற சேலை அணிந்திருந்தார்.நேற்றைய கனவிலும் இதே சேலையைத் தான் அணிந்திருந்தாரா? ச்சே இதே சேலையாக இருக்க முடியாது.ஆனால் இதனை போன்றதொரு சேலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மெரூனா? சிகப்பா? என் பெரியம்மாவின் முகம் கார்டூனிஸ்ட்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. கார்டூனிஸ்ட்களுக்கு  அல்வா தான் வேண்டுமா? இட்லி மிளாகாய் பொடி சட்னி என அவரவர் பாடு.  பெரியம்மாவிற்கு கருணாநிதி மூக்கு. மன்மோகன்சிங்கின் நெற்றி. இது போதாதா? மூவரையுமே எனக்கு பிடிக்காது. இல்லையில்லை, நால்வரையுமே எனக்கு பிடிக்காது.பெரியம்மாவில் 'அம்மா' ஒளிந்திருப்பதை கவனிக்க. ஆனால் நேற்றைய கனவில் என்னிடம் இன்முகத்தோடு பேசினார். நான் கனவில் ஆச்சர்யப்பட்டது கனவுபோல் அல்லாது துல்லியமாக நினைவில் இருப்பது மற்றொரு பேராச்சர்யம். அதுவே என் பயமும்.

அடே கண்ணா! என்கிறார் பெரியம்மா.

அடேயில் அத்தனை குழைவு. என் கனவிலும் இப்படித் தான் அழைத்தார். நகை வாங்கவேண்டும் என்றார்.துணைக்கு வாடா என்றார். எப்போதும் மறுத்துவிடும் நான் ஏனோ சரியென்று தலையாட்டிக் கொண்டே அவருடன் செல்கிறேன். நகையெல்லாம் வாங்கித் திரும்பும் வழியில் மின்சார சீர்குலைவு .என் அலைபேசி வெளிச்சமே எனக்கும் நான் வெறுக்கும் பெரியம்மவிற்கும் உற்ற துணை என்ற நிலையில் நாங்கள் உட்புகுந்து வெளியேற வேண்டிய சிறு சந்தில் நம் சொந்த நிழல்களே எழுந்து பேயாடி அச்சுறுத்தும் இருட்டில் நிழல் உருவம் ஒன்று அசைந்தாடி வருவதை கண்ட போது என் உயிர் என் கூட்டில் இல்லை.

நிஜத்தில் எனக்கு வேர்த்திருக்கிறது என்று கனவிலும் எனக்கு புரிகிறது. ஆனால் நான் கனவு கண்டுகொண்டு தான் இருந்தேன். குழப்புகிறேனா? நானே இன்னும் தெளிவடையவில்லை. அந்த இருட்டு உருவம் எங்களை நோக்கி முன்னேறி என் பெரியம்மாவிடம் இருந்த நகைப் பைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டது.நான் அசட்டுத் தனமாக அலைபேசியின் வெளிச்சத்தை அவன் முகத்தில் பாய்ச்ச யத்தனிக்க என் பதிமூன்றாயிர ரூபாய் மதிப்புள்ள அலைபேசியையும் பிடுங்கிக் கொண்டது அப்பேயுருவம்.போச்சு! நான் கனவிலிருந்து விழித்துக் கொண்டேன்.

இப்போது பயமாக உள்ளது.இருக்காதா பின்னே! இதோ இப்போது கனவில் நடந்தது போலவே நகை வாங்கி வருவதற்குள் இருட்டி விட்டது. ஐயோ! இதோ மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது.கனவை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறேனா? அதே போலொரு இருட்டு.சந்து.இந்த இடத்தில் ஒன்றை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். நான் கொஞ்சம் புத்திசாலி. நகைக்க வேண்டாம்.பெரியம்மாவின் நகை போனால் போகட்டும்.என் அலைபேசி போகலாமா? இப்படியெல்லாம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என முன்பே யூகித்து தான் எனது அலைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.பெரியம்மா இப்போது அலறுகிறாள். 'யாரோ வரப்ல இருக்கே!'

யாரும் காணோமே

நல்லா பாருடா

ஆம். ஒரு இருட்டு உருவம் எங்களை நோக்கி முன்னேறியது. இதென்ன விசித்திரமாக இருக்கிறது? அது என்னை நோக்கித் தான் வருகிறது. கனவு கண் போன்றதா? தலைகீழாக உள்வாங்கப்பட்டு நேராவதா? 'சார்வாள், பை என் பெரியம்மாகிட்ட இருக்கிறது.என்னாண்ட இல்ல' என்று அறிவுறுத்தலாமா வேண்டாமா? அவ்வுருவம் என்னை நெருங்கி என் தோளில் கை வைத்தது. பின்பு சொன்னது

'தம்பி, நீ உன் செல்போன வீட்லய வச்சுட்டு வந்துடுவேன்னு நேத்தே எனக்கு தெரியும். உனக்கு மட்டுந்தான் உலகத்துல தூங்குற வழக்கம்னு நினைப்பா? எங்களுக்கும் கனவு வரும்!'