Pages

Monday, 23 July 2012

சமூகத்தின் கை

நான் என் கடையில் படு வேகமாக ஜூனியர் விகடன் படித்துக் கொண்டிருந்தேன்.இந்த நேரத்திற்கு அந்த வயதானவர் வருவார் என தெரியும்.அவரின் மீதுள்ள ஒரே எரிச்சல் நாம் என்ன வேலை செய்தாலும்,அதனை பற்றி கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே இருப்பார்.

சில நாட்கள் முன்பு  அவர் வந்தபோது வேண்டுமென்றே அலைபேசியில் முனைப்பாய் இருப்பதை போன்று பாவனை செய்து தப்பித்தேன் . அன்றிலிருந்து முன்பு போல சகஜமாக என்னிடம்  பேசுவதில்லை. நிம்மதியாக இருந்தது. அவருக்கு அம்னீஷியா இருக்க வேண்டும்.இன்று இப்போது என்னை நோக்கி புன்னகைத்த படியே வருகிறார். நமக்கு பிடிக்காதவர்கள் நம்மை பார்த்து புன்னகைப்பதை போன்று எரிச்சல் உண்டாக்கும் விஷயம் வேறில்லை.

தம்பி எப்படி இருக்கீங்க? பாத்து ஒரு வாரம் ஆச்சு?

ஒரு வாரம் தான் சார் ஆச்சு.

ஏன் கார்த்திக் அங்க இருக்குற KIDS SCHOOL உங்க சித்தி தான நடத்துறாங்க ?

ஆமா சார் ஏன்?

இல்லை என் பேத்தி அங்க தான் படிக்குது.



என் பையனும் , மருமகளும் ஆபீஸ் போகறதால 2 வயசு பாப்பவ அங்க சேத்துட்டாங்க.

அங்க நிறைய குழந்தைக இருக்கும் சார்.அவளுக்கும் போர் அடிக்காது

ஆமாம் பா.30 வருசத்துக்கு முந்தி உங்க ஆச்சி இருந்த ஊர்ல தான் நாங்களும் இருந்தோம் .ஆச்சிகூட ரெண்டு வருஷத்துக்கு முந்தி இறந்துட்டாங்கள்ள ??

4 வருஷம் ஆச்சு  சார்

நாங்கள் எல்லாம் அந்த ஊர்ல கார்பரேசன் தொழிலாளிக . இரும்பு கவசம் மாதிரி ஒரு கை போட்டு இருப்போம்.அதுல தான் அந்த இடத்துல  இருக்குற எல்லா மனித கழிவுகளையும் எடுத்துட்டு போகணும்.

இந்த மனிதரோடு எப்படி இத்தனை நாள் பேசினோம் என்று எனக்குள் தோன்ற ஆரம்பித்தது.அவரின் மீது ஏதோ ஒரு அருவருப்பு மெல்ல தோன்றி படர ஆரம்பித்தது. அதன் முரணியக்கம் போல என் ஆழம், அவரை வெறுப்பதை விரும்புகிறதா?

ஓ.அப்படீங்களா?. சரி சார் .என்ன வேணும்.நான் கடைய பூட்டிட்டு போகணும்.

நான் சொல்வதை அவர் சட்டை செய்துகொள்வதாக தெரியவில்லை.

அன்னிக்கு தீபாவளிக்கு மொத நாளு. எல்லோரும் நோம்பிக்காசு வாங்க உங்க வீட்டு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தோம் .உங்க ஆச்சி ரொம்ப கம்மியா கொடுத்தாங்க.என் பொஞ்சாதி ஏதோ வேகத்துல என்னங்கம்மா இது , இத வச்சு என்ன பண்றது ?. இத கொடுக்கறதுக்கு கொடுக்காமையே இருக்கலாம்னு  வார்த்தைய விட்டுட்டா..

உங்க பாட்டி உடனே ' பீ அல்ற ஜாதிக்காரி உனக்கு இவ்ளோ திமிரானு கேட்டாங்க ?'

எத்தனை ஆண்டுகள் கடந்திருக்கும்? ஆனால் இன்றும் இதை நினைக்கையில் அவர் கண்களில் நீர் தேங்கி இருந்தது. எனக்கு ஏனோ வருத்தமாக இருந்தது. அந்த 80 வயது முதியவர் இதுவரை அப்படி பேசியதில்லை.

சார் அதெல்லாம் அப்ப சார். இப்ப யார் அப்படி இருக்காங்க ?. காலம் நிறைய மாறிடுச்சு. அதெல்லாம் விடுங்க சார்  .

அதுனால இல்ல கார்த்தி.நேத்து உங்க ஸ்கூல்ல எங்க பாப்பா ஆய் போயிருச்சு. உங்க சித்தி தான் கழுவிவுட்டாங்க.

அதுனால என்ன சார் ?. இதுல என்ன இருக்கு.

இல்லப்பா  உங்க சித்தி அது ஓனரா  இருந்தாலும் அவங்க பண்ணினது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.

சரி சார் அதுனால என்ன?

இல்ல இப்ப யாருப்பா மலம் அள்ளுற  ஜாதி.

நான் திரும்பி அவரை பார்க்கும் போது அவர் கண்களில் அந்த நீர் இல்லை.30 வருடமாக மனதில் தேக்கிவைத்த ஒரு வார்த்தை இன்று அக்னிக்குழம்பாய்  வெளியேறி இருக்கிறது.

அவர் முகத்தில் ஏதோ ஒரு பெருமிதம்.

இந்த சமூகத்தின்  கை மிகவும் அபாயகரமானது. அது ஒரு நாள் எல்லோரையும் அறையும். இன்று என்னை அறைந்தது போல் .

3 comments:

  1. சாட்டையடி

    ReplyDelete
  2. @thiagu நன்றி நண்பா

    ReplyDelete
  3. அருமையான கதை

    Ajitha

    ReplyDelete