Pages

Monday, 10 September 2012

என் கனவின் நிழல்

மெரூன் நிற சேலை அணிந்திருந்தார்.நேற்றைய கனவிலும் இதே சேலையைத் தான் அணிந்திருந்தாரா? ச்சே இதே சேலையாக இருக்க முடியாது.ஆனால் இதனை போன்றதொரு சேலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மெரூனா? சிகப்பா? என் பெரியம்மாவின் முகம் கார்டூனிஸ்ட்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. கார்டூனிஸ்ட்களுக்கு  அல்வா தான் வேண்டுமா? இட்லி மிளாகாய் பொடி சட்னி என அவரவர் பாடு.  பெரியம்மாவிற்கு கருணாநிதி மூக்கு. மன்மோகன்சிங்கின் நெற்றி. இது போதாதா? மூவரையுமே எனக்கு பிடிக்காது. இல்லையில்லை, நால்வரையுமே எனக்கு பிடிக்காது.பெரியம்மாவில் 'அம்மா' ஒளிந்திருப்பதை கவனிக்க. ஆனால் நேற்றைய கனவில் என்னிடம் இன்முகத்தோடு பேசினார். நான் கனவில் ஆச்சர்யப்பட்டது கனவுபோல் அல்லாது துல்லியமாக நினைவில் இருப்பது மற்றொரு பேராச்சர்யம். அதுவே என் பயமும்.

அடே கண்ணா! என்கிறார் பெரியம்மா.

அடேயில் அத்தனை குழைவு. என் கனவிலும் இப்படித் தான் அழைத்தார். நகை வாங்கவேண்டும் என்றார்.துணைக்கு வாடா என்றார். எப்போதும் மறுத்துவிடும் நான் ஏனோ சரியென்று தலையாட்டிக் கொண்டே அவருடன் செல்கிறேன். நகையெல்லாம் வாங்கித் திரும்பும் வழியில் மின்சார சீர்குலைவு .என் அலைபேசி வெளிச்சமே எனக்கும் நான் வெறுக்கும் பெரியம்மவிற்கும் உற்ற துணை என்ற நிலையில் நாங்கள் உட்புகுந்து வெளியேற வேண்டிய சிறு சந்தில் நம் சொந்த நிழல்களே எழுந்து பேயாடி அச்சுறுத்தும் இருட்டில் நிழல் உருவம் ஒன்று அசைந்தாடி வருவதை கண்ட போது என் உயிர் என் கூட்டில் இல்லை.

நிஜத்தில் எனக்கு வேர்த்திருக்கிறது என்று கனவிலும் எனக்கு புரிகிறது. ஆனால் நான் கனவு கண்டுகொண்டு தான் இருந்தேன். குழப்புகிறேனா? நானே இன்னும் தெளிவடையவில்லை. அந்த இருட்டு உருவம் எங்களை நோக்கி முன்னேறி என் பெரியம்மாவிடம் இருந்த நகைப் பைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டது.நான் அசட்டுத் தனமாக அலைபேசியின் வெளிச்சத்தை அவன் முகத்தில் பாய்ச்ச யத்தனிக்க என் பதிமூன்றாயிர ரூபாய் மதிப்புள்ள அலைபேசியையும் பிடுங்கிக் கொண்டது அப்பேயுருவம்.போச்சு! நான் கனவிலிருந்து விழித்துக் கொண்டேன்.

இப்போது பயமாக உள்ளது.இருக்காதா பின்னே! இதோ இப்போது கனவில் நடந்தது போலவே நகை வாங்கி வருவதற்குள் இருட்டி விட்டது. ஐயோ! இதோ மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது.கனவை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறேனா? அதே போலொரு இருட்டு.சந்து.இந்த இடத்தில் ஒன்றை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். நான் கொஞ்சம் புத்திசாலி. நகைக்க வேண்டாம்.பெரியம்மாவின் நகை போனால் போகட்டும்.என் அலைபேசி போகலாமா? இப்படியெல்லாம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என முன்பே யூகித்து தான் எனது அலைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.பெரியம்மா இப்போது அலறுகிறாள். 'யாரோ வரப்ல இருக்கே!'

யாரும் காணோமே

நல்லா பாருடா

ஆம். ஒரு இருட்டு உருவம் எங்களை நோக்கி முன்னேறியது. இதென்ன விசித்திரமாக இருக்கிறது? அது என்னை நோக்கித் தான் வருகிறது. கனவு கண் போன்றதா? தலைகீழாக உள்வாங்கப்பட்டு நேராவதா? 'சார்வாள், பை என் பெரியம்மாகிட்ட இருக்கிறது.என்னாண்ட இல்ல' என்று அறிவுறுத்தலாமா வேண்டாமா? அவ்வுருவம் என்னை நெருங்கி என் தோளில் கை வைத்தது. பின்பு சொன்னது

'தம்பி, நீ உன் செல்போன வீட்லய வச்சுட்டு வந்துடுவேன்னு நேத்தே எனக்கு தெரியும். உனக்கு மட்டுந்தான் உலகத்துல தூங்குற வழக்கம்னு நினைப்பா? எங்களுக்கும் கனவு வரும்!'


Monday, 23 July 2012

சமூகத்தின் கை

நான் என் கடையில் படு வேகமாக ஜூனியர் விகடன் படித்துக் கொண்டிருந்தேன்.இந்த நேரத்திற்கு அந்த வயதானவர் வருவார் என தெரியும்.அவரின் மீதுள்ள ஒரே எரிச்சல் நாம் என்ன வேலை செய்தாலும்,அதனை பற்றி கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே இருப்பார்.

சில நாட்கள் முன்பு  அவர் வந்தபோது வேண்டுமென்றே அலைபேசியில் முனைப்பாய் இருப்பதை போன்று பாவனை செய்து தப்பித்தேன் . அன்றிலிருந்து முன்பு போல சகஜமாக என்னிடம்  பேசுவதில்லை. நிம்மதியாக இருந்தது. அவருக்கு அம்னீஷியா இருக்க வேண்டும்.இன்று இப்போது என்னை நோக்கி புன்னகைத்த படியே வருகிறார். நமக்கு பிடிக்காதவர்கள் நம்மை பார்த்து புன்னகைப்பதை போன்று எரிச்சல் உண்டாக்கும் விஷயம் வேறில்லை.

தம்பி எப்படி இருக்கீங்க? பாத்து ஒரு வாரம் ஆச்சு?

ஒரு வாரம் தான் சார் ஆச்சு.

ஏன் கார்த்திக் அங்க இருக்குற KIDS SCHOOL உங்க சித்தி தான நடத்துறாங்க ?

ஆமா சார் ஏன்?

இல்லை என் பேத்தி அங்க தான் படிக்குது.



என் பையனும் , மருமகளும் ஆபீஸ் போகறதால 2 வயசு பாப்பவ அங்க சேத்துட்டாங்க.

அங்க நிறைய குழந்தைக இருக்கும் சார்.அவளுக்கும் போர் அடிக்காது

ஆமாம் பா.30 வருசத்துக்கு முந்தி உங்க ஆச்சி இருந்த ஊர்ல தான் நாங்களும் இருந்தோம் .ஆச்சிகூட ரெண்டு வருஷத்துக்கு முந்தி இறந்துட்டாங்கள்ள ??

4 வருஷம் ஆச்சு  சார்

நாங்கள் எல்லாம் அந்த ஊர்ல கார்பரேசன் தொழிலாளிக . இரும்பு கவசம் மாதிரி ஒரு கை போட்டு இருப்போம்.அதுல தான் அந்த இடத்துல  இருக்குற எல்லா மனித கழிவுகளையும் எடுத்துட்டு போகணும்.

இந்த மனிதரோடு எப்படி இத்தனை நாள் பேசினோம் என்று எனக்குள் தோன்ற ஆரம்பித்தது.அவரின் மீது ஏதோ ஒரு அருவருப்பு மெல்ல தோன்றி படர ஆரம்பித்தது. அதன் முரணியக்கம் போல என் ஆழம், அவரை வெறுப்பதை விரும்புகிறதா?

ஓ.அப்படீங்களா?. சரி சார் .என்ன வேணும்.நான் கடைய பூட்டிட்டு போகணும்.

நான் சொல்வதை அவர் சட்டை செய்துகொள்வதாக தெரியவில்லை.

அன்னிக்கு தீபாவளிக்கு மொத நாளு. எல்லோரும் நோம்பிக்காசு வாங்க உங்க வீட்டு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தோம் .உங்க ஆச்சி ரொம்ப கம்மியா கொடுத்தாங்க.என் பொஞ்சாதி ஏதோ வேகத்துல என்னங்கம்மா இது , இத வச்சு என்ன பண்றது ?. இத கொடுக்கறதுக்கு கொடுக்காமையே இருக்கலாம்னு  வார்த்தைய விட்டுட்டா..

உங்க பாட்டி உடனே ' பீ அல்ற ஜாதிக்காரி உனக்கு இவ்ளோ திமிரானு கேட்டாங்க ?'

எத்தனை ஆண்டுகள் கடந்திருக்கும்? ஆனால் இன்றும் இதை நினைக்கையில் அவர் கண்களில் நீர் தேங்கி இருந்தது. எனக்கு ஏனோ வருத்தமாக இருந்தது. அந்த 80 வயது முதியவர் இதுவரை அப்படி பேசியதில்லை.

சார் அதெல்லாம் அப்ப சார். இப்ப யார் அப்படி இருக்காங்க ?. காலம் நிறைய மாறிடுச்சு. அதெல்லாம் விடுங்க சார்  .

அதுனால இல்ல கார்த்தி.நேத்து உங்க ஸ்கூல்ல எங்க பாப்பா ஆய் போயிருச்சு. உங்க சித்தி தான் கழுவிவுட்டாங்க.

அதுனால என்ன சார் ?. இதுல என்ன இருக்கு.

இல்லப்பா  உங்க சித்தி அது ஓனரா  இருந்தாலும் அவங்க பண்ணினது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.

சரி சார் அதுனால என்ன?

இல்ல இப்ப யாருப்பா மலம் அள்ளுற  ஜாதி.

நான் திரும்பி அவரை பார்க்கும் போது அவர் கண்களில் அந்த நீர் இல்லை.30 வருடமாக மனதில் தேக்கிவைத்த ஒரு வார்த்தை இன்று அக்னிக்குழம்பாய்  வெளியேறி இருக்கிறது.

அவர் முகத்தில் ஏதோ ஒரு பெருமிதம்.

இந்த சமூகத்தின்  கை மிகவும் அபாயகரமானது. அது ஒரு நாள் எல்லோரையும் அறையும். இன்று என்னை அறைந்தது போல் .

Thursday, 21 June 2012

சாட்சி

இரவு மணி இரண்டு இருக்கும்.

கார்த்திக் சற்றும் பயமில்லாமல் அந்த ஊரின் புனிதமேரி நினைவாலயத்தின் உள்ளே சென்றுகொண்டு இருந்தான்.அவன் அலைபேசியின் வெளிச்ச உதவியோடு கல்லறைகளை கடந்துகொண்டு இருந்தான்.தான் தேடிவந்ததை கண்டது போல் ஒருநிமிடம் ஒரு கல்லறையை வெறித்துப் பார்த்தான்.

                                                           கரோலின் பெர்னாண்டஸ் 
                                          தோற்றம் 22.06.1986 மறைவு 26.12.2010 .

அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தவன்  சட்டென அங்கிருந்த ஒரு கோடாலியை எடுத்து கல்லறையை உடைக்கத் தொடங்கினான்.

உள்ளே அவளின் சருகு போன்றதொரு கூடு  தான் இருந்தது.மூக்கின் துவாரம் வழியாக ஒரு புழு ஊர்ந்து கொண்டு இருந்தது.
அவனது முகம் வியர்த்துவிட்டது.சட்டென அந்த உடலை எடுத்து தன் முகத்தின் அருகே கொண்டுவந்தான்.தன் மொபைலில் ஒரு புகைப்படம் எடுப்பதற்குள் எங்கிருந்தோ வந்த கூட்டம் அவனை சுற்றிவளைத்துவிட்டது.

காவல்நிலையம்.....

..................
சற்று சோர்வடைந்த குரலுடன் கார்த்திக் பேச ஆரம்பித்தான்.

நானும் கரோலினும் லவர்ஸ் சார்.
.............................
............................
அவன் கதையைக்கேட்டு எல்லோரும் சோகமுகத்தோடு இருந்தனர்.

ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டு இருக்கும் பொழுது வேறொரு கார் நேரெதிரே வர ;இவன் தன் காரை திருப்பமுயன்று அது ஒரு மரத்தின் மீது மோதி அவள் இறந்துவிட்டதாகவும் கூறினான்.

இறந்தாலும் காதலி காதலிதானே. அவள் பினமானாலும் ,சில வருடத்தில் மக்கிவிட்டாலும் இவன் காதல் போயத்துவிடுமா என்ன?.

இவனது முகவரியைக்குறித்துக்கொண்டு  காவல்துறையினர்  இவனைவிடுவித்தனர்.

காரில் தன் நண்பனோடு பயணிக்கத்தொடங்கினான்.

டேய் என்ன சொல்லிடா தப்பிச்ச . கார் ஓட்டிக்கொண்டே பதில் எதிர்பார்த்து இருந்தான் ஜெரோம்.

பதிலெல்லாம் இருக்கட்டும்.பெட் வச்ச 5000 ரூபாயை எடு. என்னமோ ஜீசஸ் , பிசாசுனெல்லாம் பயம் காட்டின.எப்புடி.

கண்டிப்பா காச தர்றேன்.என்னடா சொன்ன?.

லைட்டா மன்மதன் அம்பு கதைய உல்டாபண்ணி சொன்னேன். எல்லோரும் நம்பீட்டாங்க.

சரி அந்த பொண்ணு.

கரோளின்க்ரா பேரயே அங்க தான் பார்த்தேன். அட போட பொணம் என்ன வந்து சாட்சியா சொல்ல போகுது.

இருவரும் சிரித்தனர்.

மறுநாள் காலை ...

காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உடல் நசுங்கி பலி.

இது விபத்து அல்ல கரோலின் தான் இவர்களை கொன்றாள் என்று இந்த இரு பிணமும் சாட்சியா சொல்ல போகிறார்கள்

நோட்டு:புள்ளி மட்டும் வைத்து இருக்கும் இடங்களில் நீங்களாகவே
ஒரு காதல் கதையை முடிவு செய்துகொள்ளவும்